2.6.2 பொங்கல் திருவிழா

பொங்கல் திருவிழா

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்; வாழ்க்கை செழிக்கும்’ என்பது தமிழரது நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத் திருநாள். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பித்து உழவின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும் வேளாண்மைத் திருநாள், போகிப் பண்டிகை, மணப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் ஒரே திருவிழாக் கோலம்தான்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப் புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும். சிலப்பதிகாரம்குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை என்றும் கூறப்படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப் பொங்கல் பானையில் புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டு, மஞ்சளும் செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு, இயற்கையை வழிபடுவது பொங்கல் திருநாளாகும்.

தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. எருதுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய திருநாளாக இது கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.

என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று தொட்டு இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில் இவ்வீர விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.

பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும் பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப் பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது கன்னிப் பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம் ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர் பெறுவதாயிற்று.

இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின் சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும் பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம் தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப் பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக் கிடைத்த பெருமையாகும்.     http://www.tamilvu.org/