உழைப்பாளியின் பொங்கல்
-சு.பொ.அகத்தியலிங்கம்
உழைப்பைப் போற்றும் உன்னதத் திருநாள்
பொங்கல்.
வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத
பல சிறப்புகள் பொங்கலுக்கு உண்டு. என்னதான் ‘சங்கராந்தி’என புராணிகர்கள் நீட்டி முழக்கினாலும்-எழுதினாலும் இன்னும் எம்கிராமத்து
மக்களின் நாவில் அது பொங்கல் பண்டிகை என்றே புழங்குகிறது. ஏனெனில், புராணப் பொய்மைகளை
சூட்டிக் கொள்ளாத பண்டிகை இது. வழக்கமாக எல்லா பண்டிகைகளையும் மதம் ‘ஹைஜாக்’ செய்து விடும். ஆனால் எவ்வளவு முயன்றும் இன்னும் உழவனின் அறுவடைத் திருநாளாகவே-
உழைப்புக்கு நன்றி கூறும் இனிய நன்னாளாகவே பொங்கல் திகழ்வதுதான் இதன் தனிச்சிறப்பு.
அறுவடைத் திருநாளை கொண்டாடாத நாடுகளே
இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் அதன்பண்பாட்டிற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் கொண்டாடுவார்கள்.
முதல்நாள் உழவுக்கு பேருதவி செய்யும் இயற்கைக்கு நன்றி சொல்ல ‘ஞாயிறு போற்றும்’ நாளாக, அடுத்தநாளை உழவுக்கு அடிப்படையான கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும்
‘மாட்டுப் பொங்கலாக’, மூன்றாம் நாளை இளம் ஆண்களும்,
பெண்களும் கூடிக் கொண்டாடும் ‘கன்னிப் பொங்கலாக’ கொண்டாடுகிற உயர்ந்த
பண்பாடு தமிழ் மண்ணுக்கே உரியது.
பொங்கலன்று காலை வாசலை சாணம் தெளித்து,
மெழுகி, கோலமிட்டு, மண்ணால் அல்லது சாணத்தால் சாமியைச் செய்து வைத்து, முக்கூட்டு அடுப்பு
அமைத்து, புத்தரிசியும், பாலும் வெல்லமும் புதுப்பானையிலிட்டு பொங்கலிடும் கிராமத்துப்
பொங்கல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆயினும், பொங்கலென்றால் சர்க்கரைப் பொங்கலும்,
காய்கறிகளும் கரும்பும், மஞ்சளும் நம் நினைவில் நிறைந்து நிற்கிறது. அதுமட்டுமா? ஜல்லிக்கட்டு
போன்ற வீர விளையாட்டுகள், தெரு முழுக்க பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் என விதவிதமாய்
பொங்கல் களைகட்டுகிறது. நவீன ஊடகங்கள் பொங்கலுக்கு மேலும் கலைஎழில் கூட்டுகிறது. சாதி,
மத வேறுபாடுகளை வேரறுக்க சமத்துவப் பொங்கல்கள் நாடு முழுவதும் பொங்க வேண்டுமென்கிற
பெருங்கனவோடு முற்போக்காளர்கள் நடத்துகிற பொங்கல் விழாக்கள் அடடா! பண்டிகையின் பெருமையோ
பெருமை.
இத்திருநாளை திருவள்ளுவர் தினமாகவும்
தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாகவும் கொண்டாடுவது சாலப்பொருத்தம். உழவனின் பெருமையை
உரக்கச் சொன்னவர் வள்ளுவர். சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்றவர். உழுவாரே உலகத்தாருக்கு
அச்சாணி என்றவர். உழவர்கள் வேலை செய்யாது கையை முடக்கி உட்கார்ந்துவிட்டால் முற்றும்
துறந்த துறவிகளுக்கும் வாழ்க்கை இல்லை என்றவர். உழுதுண்டு வாழ்வதே வாழ்க்கை மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வது என்று அடிக்கோடிட்டவர். இரந்துதான் உயிர் பிழைக்க வேண்டுமென்றால்
இந்த உலகத்தைப் படைத்த இறைவனே ஒழிக என உரக்க முழக்கமிட்டவர். அந்த பொதுமறை திருக்குறளைப்
போற்ற -திருவள்ளுவர் தினமாக மாட்டுப் பொங்கலையும்: பொங்கலை தமிழ் புத்தாண்டு துவக்கமாகவும்
கொண்டாடுவது உயரிய பண்பாட்டு விழுமியம் ஆகும்.
ஒருபக்கம் உற்சாகமாய் உழவனை போற்றுகிற
போது இன்றைய உழவனின் நிலை இதயத்தை பிசைகிறது. கட்டுப்படியாகிற விலை கிடைக்காமல் உணவுப்
பயிர்களிலிருந்து பணப்பயிருக்கு மாறுவதும்: இன்னும் கரும்பு போன்ற பணப் பயிருக்கு கூட
விலை கிடைக்காமல் தரிசாக விடுவதும், விளை நிலங்கள் எல்லாம் ரியல் எ°டேட்டுகளாய் உருமாறுவதும் அபாய எச்சரிக்கையாகும். அது மேலும் பெட்ரோல்
நெருக்கடியை காரணமாக்கி வல்லரசுகள் பயோ-டீசல் என்கிற பெயரால் மக்காச்சோளம் உட்பட உணவு
தானியங்களை எரிப்பதும் அதனால் வருங்காலத்தில் சோற்றுக்கே பஞ்சம் வந்துவிடுமோ என்கிற
கவலையும் இந்தப் பொங்கல் நாளில் வரத்தான் செய்கிறது.
ஆயினும், பட்டுக்கோட்டையின் பாடல்வரிகள்
நமது கவலைக்கு ஒத்தடம் கொடுக்கிறது.
“செய்யும் தொழிலே தெய்வம்-அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி-கொண்ட
கடமைதான் நமக்கு பதவி (செய்யும்)
பயிரை வளர்த்தால் பலனாகும்-அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்கு துணையாகும்-இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குலமானமுண்டு
வரும்காலமுண்டு அதை நம்பிடுவோம்
(செய்யும்)
சாமிக்கு தெரியும், பூமிக்கு தெரியும்
ஏழைகள் நிலைமை-அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை-இதைப்
பாடிப் பாடி விளையாடி ஆடிப்பல
கோடி கோடி முறைக் கும்பிடுவோம்
(செய்யும்)
காயும் ஒருநாள் கனியாகும்-நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்-நம்
கனவும், நினைவும் நிலையாகும்-உடல்
வாடினாலும் பசி மீறினாலும்-வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம் (செய்யும்)
webdunia