தை பிறப்பின் சிறப்பு!
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது.
இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில்
பார்க்கும் போது, பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள்.
அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.
அதில் மகரத்தில் இருந்து கடகம்
வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில்
இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.
அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம்
துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்ஷாயணம் (தெற்கு), உத்திராயணம்
(வடக்கு) என்பவை.
அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும்
சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சததிரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில்
கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.
அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால்
உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.
அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள்
சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக்
கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால் விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது
ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.
தைப் பொங்கல்!
மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம்
துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத்
தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன்
தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான்
சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன.
எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற
தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது.
சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.
பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம்.
பரிகாரத்திற்கும் தையே சிறந்தது!
ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர்.
நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது.
தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.
எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும்.
சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர்.
தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை.
webdunia